Thursday, October 31, 2013

“எது எடுத்தாலும் 20 ரூபா”





அம்மா மூக்குத்திய
அடகு வைச்சு
பத்தாயிரம் பணம் வாங்கி 
பனியன் ஜட்டி வியாபாரம்.....

அம்மாவின் நகையெல்லாம்
அங்குசாமி அடகுகடை(ல்)யில்  
முங்கியிருக்க மீதம் அவள் பெயரில்
இருப்பது “தங்க(ம்)மும்
மூக்குத்தியும் தான்...

அதிகமாக பஞ்சர் ஒட்டிய
சைக்கிளில் பண்டல்களாக
காட்டிக்கொண்டு
பக்கத்துக்கு டவுனுக்கு பயணமாகிறார் அப்பா...
கூடவே நானும்

தனது பாரத்தை பிளாட்பாரத்தில்
இறக்கி
கடை பரப்புகிறார் அப்பா...

“எது எடுத்தாலும் 20 ரூபா
கூவு எனை ஏவினார்
அப்பா...

5 பூமார்க் பீடி ஒன்று
அப்பா வாயில்
சாம்பலாய் செத்துக்கொண்டு இருந்தது...

உயிருக்கு போராடிய
நிலையில் கீழே விழுந்தது
பீடி

கனன்று கொண்டிருந்த
பீடியை
கருணைக்கொலை செய்தது
ஒரு சொட்டு மழை...

நான் அன்னாந்து ஆகாசம் பார்த்தேன்..

வங்ககடலை
வழித்து போடுவது போல
ஆரம்பமானது
அடைமழை....

மூட்டை கட்டிய
பனியன்களோடு மூலையில்
நின்றோம் நாங்கள் ...

பூமியில் எல்லா பரப்புகளும் ஈரமாயின
எங்கள் மனதை தவிர....

தீப ஒளியை
அணைத்து போனது திடீர் மழை...

மழை
இயற்கையின் கொடையா??
இல்லை

பிழையா???

Monday, October 14, 2013

வாலி





வாலி 

இரண்டெழுத்து இலக்கியம் 


பாடலே உன் மேல் 
பள்ளிகொண்ட
ரெங்கராஜன் நீ !

நீ ஜிப்பா அணிந்த வெண்பா !

நீ புகையிலை போடும் புறநானூறு !

மெட்டுக்கு பாட்டா

பாட்டுக்கு மெட்டா

துட்டுக்குத்தான் பாட்டு

என பொட்டில் அடித்து சொன்னவன் நீ !


பாடல் நாடாவால் திரையரங்கை

கட்டிபோட்ட

திருவரங்கம் !

தேசிய விருதுக்கு கமிட்டி

கேட்டது பயோடேட்டா

நீ சொன்னாய் விருதுக்கே

டாட்டா !

உன் பேனா கர்ப்பத்தில்

பிறந்தன 15,000 பாடல் குழந்தைகள் !


சக்கரவல்லிகிழங்கு சர்ச்சை

ஏற்கனவே

இயக்குனர் எழுதிய பாடலுக்கு

உன் intial போட்டது தான் பிரச்சனை...


M.G.R தொடங்கி S.T.R வரை

சிவாஜி தொடங்கி ஷ்யாம் வரை

இன்னும் பத்து ஆண்டுகள் இருந்தால்

ரஜினியின் பேரனுக்கும்

அறிமுக பாடலை

அமர்களப்படுத்திஇருப்பாய்

Saturday, April 20, 2013

லட்சுமி .....

லட்சுமி .....

ஒண்டிக்கொள்ள குடிசை 
இல்லை 

ஒட்டிக்கொள்ள நாதி
இல்லை

நகரவாசிகளால் நிரம்பிய
வீதியில்
நடைபாதை வாசி

ஏழைகள் கேட்காமல்
இறைவன்
கொடுக்கும் வரம் குழந்தை

அந்த அறைவயிற்றில்
முழு உயிர்
உயிருள்ள சவங்கள் உலவும் உலகில்
பிரசவ(ம்)ப் பிரச்சனை

அழுகுரல் அந்த
அரை முழுதும் அப்பியது
செவிழிக்கு மட்டும்
செவிடானது மனது

"மாமூல்" வேலை
திருப்பி அனுப்பியது
திக்கற்ற திசைக்கு

பேருந்து நிலைய கழிவறை
பிரசவ அறை

கழிவறையில் மலத்தோடு
இருக்கவேண்டிய
மனிதர்கள் மருத்துவமனையில்

பிறர் எல்லாம் சவம்
ஆன நிலையில்
பிரசவம் பார்க்கிறாள் பண்ணாரி

பண்ணாரி "அம்மன்"ல் பாதியா ??
மனிதம் உள்ள மனங்களின் மீதியா ?

"என்னிடம் பணம் இல்லை "
பிஞ்சு கைமூடி
பிறக்கிறது
ஆண் குழந்தை ...................

Thursday, April 4, 2013

உன் ஒற்றை பார்வை ..

எதுவும் இல்லாத வெறுமை 
என்னுள் வரும் போதெல்லாம் .......

எல்லாமுமாக நிரப்பிவிட்டுபோகிறது 
உன் ஒற்றை பார்வை .....!!!!

Friday, March 30, 2012

கோணிப்பை



பூமி பிளக்கும்
பூகம்ப வெயில்

ஆக்கிரமிப்புகளை அகற்றியதில்
அரை நிர்வாணமாய்
ரோட்டோரகடைகள்

ஓரம்
ரோட்டோரம்
உழைத்து இளைத்துப்போன ஊசிகள்
உருகிய நிலையில்
மெழுகு தோய்த்த நூற்கண்டுகள்
கோணிப்பை
சகிதமாக கூன்விழுந்த கிழவன்

புகையிலை தின்றது போக
மீதமுள்ள பற்கள்
மிச்சமிருக்கும் சிரிப்புடன்
பேரம் பேசுபவர்களிடம்
பெரியவர்
வந்து போன கல்மனதுக்காரர்களால்
நிரம்பி இருந்தது அவரது கல்லா
அரைவயிராய்

அறுந்துபோனது செருப்புகளின் காதுகள்
மட்டுமல்ல
மனிதாபிமானமும் தான்

Wednesday, March 21, 2012

நூலன்படை

புதிதாக கட்டியிருக்கும்
வீட்டுக்குள்
புகுந்துகொள்ளும் நூலன்படைபோல
சலவை செய்த புத்திக்குள்
சத்தம் போடுது உன் நினைப்பு !

தலையில் சீப்பை
வைத்துகொண்டு தேடுவதைப்போல
தேடிக்கொண்டே இருக்கிறேன்
உன்னை எனக்குள்

உன் அலை அடித்து
அடித்தே
பாசம் பிடித்துப்போனது
இந்த பாராங்கல்லில் !

இரவில் எரிய ஆரம்பித்த கொசுவர்த்தி
தன்னை சுற்றி போடும்
சாம்பல் வளையம் போல
உன்னை சுற்றுது என் நினைப்பு

காலம் உன் அடர்த்தியை
குறைத்தாலும்
வடுக்களை மட்டும் வாரிப்போவதில்லை

Wednesday, September 28, 2011

வாசிக்க மறந்த மனிதர்கள்


எதிர்வீட்டு மாடியை எதிர்பார்த்து
காத்திருந்தது
ஒரு காகம்

பக்கத்துவீட்டு பராமரிப்புக்காக
வந்திறங்கியது
ஒரு லாரி மண்
அதில் குதித்து விளையாடும் சிறுவர்கள்
விரட்டியடிக்கும் வீட்டுகாரர் ..

பாண்டி,கபடி,கோலிகுண்டு,பம்பரம்
விளையாட
சிறுவர்கள் வீதியில் இல்லை
ஜெனரேட்டர் வசதியுடன்
கேம்ஸ் சென்டர் அருகில் இருப்பதால்

கொத்தனார் வேலைக்கு
பேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்
தினக்கூலிகள்

இருந்த மின்சக்தியும்
நீர்த்துபோய் செத்துப்போனது
செல்போன்

ஒருநாள் மின்சாரம் இல்லை....
வாசிக்க மறந்த மனிதர்களை
வாசித்துக்கொண்டு இருந்தேன்
வாசலில் அமர்ந்து..............